டிரெண்டிங்

“திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” - ஸ்டாலின் கடிதம்

“திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” - ஸ்டாலின் கடிதம்

webteam

திராவிட இயக்கத்தை அழிக்க எத்தனை வித்தைகள் செய்தாலும் இங்கே எடுபடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொய் நெல்லை குத்தி புரளிச் சோறு பொங்க நினைத்தவர்களை, வாக்கு என்னும் அகப்பைக் கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் ‌மக்களுக்கு அளித்தோமோ அதை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.‌

நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் தமிழக மக்கள் நலன் காக்கும் உரிமைக் குர‌லாக திமுக ஓங்கி ஒலிக்கும். மாநில ‌நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோன உரிமைகளை மீட்டெடுக்கவும் அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

இனிவரும் காலம் மாநிலங்களை மையப்படுத்தும்‌ ஆக்கப்பூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது” எனத் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.