எம்.எல்.ஏ.க்கள் வீடியோ விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அறிக்கையை சட்டப்பேரவையில் படித்துக்காட்டக் கோரி எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டவிதிப்படி வைத்த கோரிக்கையைக் கூட சபாநாயகர் சர்வாதிகாரப் போக்கோடு நிராகரிக்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்திருக்கக் கூடிய குதிரை பேர ஆட்சிக்கு முறைகேடான வாக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது என்று நாங்கள் குற்றம்சாட்டினோம். அதை நிரூபிக்கும் வகையில் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் வீடியோ ஆதாரங்கள் வந்தது. நடைபெற்ற ஜனநாயக மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் ஆளுநரை வலியுறுத்தினோம். இந்த பிரச்னை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக தலைமைச் செயலாளருக்கும், சட்டப்பேரவை சபாநாயகருக்கும் கவர்னர் மாளிகை அறிக்கையை வெளியிட்டார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 273 என்ன சொல்கிறது என்றால், ஆளுநரிடமிருந்து பேரவைக்கு வரும் அறிக்கைகள் சட்டமன்றத்தில் படித்துக்காட்டப்பட வேண்டும் என்று இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்த விதி உள்ளது. இதைத்தான் நாங்கள் நேரமில்லா நேரத்தில் (Zero Hour) சுட்டிக்காட்டினோம். இந்தக் கோரிக்கையை இன்று சபாநாயகரிடம் வைத்தபோது, “அப்படியெல்லாம் படித்துக் காட்ட வேண்டியதில்லை” என்று கூறி மறுத்துவிட்டார். நாங்கள் சட்டவிதிகளையெல்லாம் சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்தபோதும், சபாநாயகர் சர்வாதிகாரப் போக்கோடு அதை நிராகரித்துவிட்டார்.” என்று கூறினார்.