டிரெண்டிங்

இன்னும் எய்ம்ஸ் அமைக்காதது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

இன்னும் எய்ம்ஸ் அமைக்காதது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

webteam

மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ரூ.2,000 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2017-18ம் ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, செயல் வடிவம் பெற்றுவிட்டது. ஆனால் அதற்கு முன்பே தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமையாமல் இருப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் நடத்தும் கபடநாடகமே காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

3 ஆண்டுகள் கடந்தும், மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு இன்றுவரை அமலுக்கு வராமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் நலன் மீது மத்திய பாஜக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இனியும் காலம் தாழ்த்தாமல், அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.