ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆர்.கே நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் கொடுத்த புகார் பற்றி விசாரிக்கவேண்டிய பொறுப்பு, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி தன் அரசியல் சட்ட கடமையிலிருந்து விலகிச் செல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக காவல்துறை, எடப்பாடி பழனிசாமி மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதால், முதலமைச்சர் தாமாக பதவி விலகி சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடவேண்டும். இல்லையென்றால் 89 கோடி ரூபாய் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியே தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டினால் அரசியல் சட்டம் உறுதியளித்துள்ளபடி நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.