டிரெண்டிங்

ஒகி பாதிப்பை மத்தியக்குழுவிடம் மறைக்காதீர்: ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

விவசாயிகள் உயிரிழப்புகளை போல், ஒகி புயல் பாதிப்பு விவரங்களை மத்தியக் குழுவிடம் தமிழக அரசு மறைக்ககூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் வீசி சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் சேதங்களைப் பார்வையிட சாவகாசமாக மத்தியக்குழு வருவது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு முழு முதல் காரணம் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுதான் என்பதை யாரும் மறுத்திட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒகி புயல் பாதிப்பினை சீரமைக்க ரூ.13,520 கோடி நிதி மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அதற்காக நிதி வழங்க பாஜக அரசு முன்வரவில்லை என்று அவர் சாடியுள்ளார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை வரவுள்ள நிலையில், காவிரிப்பிரச்னையில் விவசாயிகள் உயிரிழப்புகளை மறைத்தது போல் இல்லாமல், ஒகி பாதிப்புகளை மத்தியக்குழுவிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதற்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு முதல்கட்டமாக 133 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.