மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சை பெறும் போது யாருமே பார்க்கவில்லை என்றால், இடைத்தேர்தலில் அவரது கைரேகையை பெற்றது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் தற்போது சர்ச்சைகள் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்காமல் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் முட்டுக்கட்டை போடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது யாருமே பார்க்கவில்லை என்றால், 4 தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவு எப்படி பெறப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை துவங்கினால் அப்போலோவில் ஜெயலலிதாவை சுற்றியிருந்தவர்களுக்கு துணைபோன பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சிக்கிக்கொள்ளவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இதுவரை விசாரணைக்கான நீதிபதியை நியமிக்கவில்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை இனிமேலும் மறைப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று கூறியுள்ளார்.