டிரெண்டிங்

“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்

“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்

webteam

நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று சாதி ஆணவம் சரியட்டும், சமத்துவபுரங்கள் மலரட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுந்திய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த சாதி அடக்கு-ஒடுக்குமுறைகளை ஒரு நூற்றாண்டு காலத்தில் அப்படியே புரட்டிப் போட்டு, சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று! சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் என நீதிக்கட்சியின் முன்னோடிகளை நினைவு கூர்வதற்கான நாள்.

வகுப்புவாரி உரிமை எனப்படும் இடஒதுக்கீடு, அதன் வாயிலாக கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உரிமை, அறநிலையத்துறைச் சட்டம் வாயிலாக வழிபாட்டு உரிமைகள் மீட்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் காக்கும் உயர்வான சட்டங்கள், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் கட்டாயம் என்ற தடையை அகற்றி நம் குடும்பத்தாரும் டாக்டர் ஆவதற்கான வாய்ப்பளிப்பு என அனைத்தையும் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் செயல்படுத்தியது நீதிக்கட்சி அரசாங்கம். 

ஆங்கிலேயர் ஆட்சியில் பல சாதனைகளையும் நிறைவேற்றியது நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கம். அதன் தொடர்சியாகத்தான் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் சமூக நீதிக் கொள்கையால் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் மனதுக்கு இடர் நிறைந்ததாகவே இருக்கிறது. கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளும் கொடூரமாகப் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் தொடரும் வேதனையான நிலையில், சாதிப் புயலும் சேர்ந்து வீசி இரு இளம் உயிர்களை அநியாயமாகப் பறித்திருக்கும் கொடுமையான நிகழ்வு இதயத்தை கலங்கடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகேயுள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த இளைஞர் நந்தீஷ்-இளம்பெண் சுவாதி கொலை தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இதைப் பார்க்கும்போது பாசத்தை விட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற கேள்வி எழுகிறது. பிரச்னையை பேசி தீர்க்காமல் சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும் அவரது கணவரையும் தீர்த்துக் கட்டுவது என்பது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம்.

அண்மைக்காலமாக இத்தகைய கொடூரக் குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த மண், அறிவால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சாதி வெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

இந்தியாவில் வேறெங்கும் ஏற்படாத சமுதாய மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினால் ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய சாதி வெறிப் படுகொலைகளைக் கண்டிப்பதில்லை என்றும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது என்றும் சிலர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது. 

அடுத்து வரும் தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சியமைக்கும்போது, சாதி வெறிக் கொலைகளைத் தடுக்கவும் அத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளை வகித்து பல சமத்துவபுரங்களைத் திறந்து வைத்துள்ளேன்.

சாதி வெறியையும் ஆணவத்தையும் அகற்றி, மக்கள் மனங்களில் சமூக நீதியை விதைத்து, நல்லிணக்கத்தை வளர்த்து, தமிழ்நாடே சமத்துவபுரமாகப் பூத்துக்குலுங்கும் உன்னதத்தை உருவாக்கிட தடைகள் பல கடந்து தயங்காமல் பணியாற்றிட சமூக நீதி காத்த நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் சூளுரைப்போம்.

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனித மனங்களை வெல்வோம்;. சாதி வெறி ஒழித்து, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை பெருமிதத்துடன் மலரச் செய்திடுவோம்.” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.