தமிழக சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு, சபாநாயகரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதனையடுத்து சட்டபேரவையில் எம்எல்ஏ சரவணன் தொடர்பான வீடியோ விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுப்பினார். பேர விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவும் அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் தனபால் இதற்கு அனுமதி மறுத்தார். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுதொடர்பாக பேரவையில் விவாதிக்க முடியாது என்றும், வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் அனுமதிக்கத் தயார் என்றும் தனபால் கூறினார்.
இதனை திமுக உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பத்தோடு கடும் அமளி ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு முக்கியமானதாக கருதப்படும் எம்எல்ஏ சரவணனும் அந்த சமயத்தில் பேரவையில் தான் அமர்ந்திருந்தார். கடும் அமளிக்கு இடையே சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் திமுக எம்எல்ஏ-க்களின் கூச்சல் குழப்பம் தொடர்ந்தது.
அமளி தொடர்ந்தால் திமுக எம்எல்ஏ-க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் கூச்சல் குழப்பம் நின்றபாடில்லை. இதனையடுத்து சபாநாயகர் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெயேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏ-க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை வளாகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ-க்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எம்எல்ஏ சரவணன் கூறுவது போன்ற வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.