திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து அரசியல் பிரவேசத்துக்கு ஆசி பெற்றார். இந்தச் சந்திப்பின் போது ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல; இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார். புதிய கட்சி தொடங்கும் போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அரசியல் பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையில் இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம்.
திமுகவின் ஆதரவு ரஜினிக்கு தேவையா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்து பலர் தோற்ற வரலாறு நமக்கு தெரியும். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட மண் தமிழகம்” என்றார்.