புதிய ஆளுநரிடம் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை அளித்துள்ளதாகவும், தேவையெனில் நேரில் சந்திப்பேன் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய ஆளுநர் பதவியேற்ற பிறகு முதலமைச்சர் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் வாழ்த்து கூறினர். அமைச்சர்களைத் தொடர்ந்து ஆளுங்கட்சியின் கொறடாவும் வாழ்த்து தெரிவித்தார்.
நியாயமாகவும், முறைப்படியும் அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித்தலைவர் வாழ்த்துக் கூறுவதுதான் முறை. ஆனால் நான் வாழ்த்துக் கூற சென்றபோது, என்னை தடுத்த ஒரு அதிகாரி தற்போது நீங்கள் வாழ்த்துக் கூறக்கூடாது, நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்த பிறகு தான் நீங்கள் செல்ல வேண்டும் என்று கூறினார். நான் அதை மதித்தேன். அப்படியென்றால் நீதிபதிகள் வாழ்த்துக்கூறிய பிறகுதான் அமைச்சர்களும் வாழ்த்துக் கூறியிருக்க வேண்டும் என்பதே முறை.
ஆனால் அந்த முறை அங்கு மீறப்பட்டிருக்கிறது. இதனால் அமைச்சர்களுக்குப் பிறகு நான் சென்று வாதிட்டேன், பின்னர் வேறு வழியின்றி என்னை வாழ்த்துக் கூற அனுமதித்தார்கள். நானும் வாழ்த்தி விட்டு வந்தேன். அத்துடன் தற்போது உள்ள டிஜிபி மீது ஊழல் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆளுநரை நேரில் சந்தித்து முறையிடுவேன்.” என்று கூறினார்.