கோவையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தன்னை பார்த்து திமுக அஞ்சுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக திமுக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் கோவை சிவானந்த காலனி பகுதியில் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இரண்டே நாளில் அறிவிக்கப்பட்டு இந்த அளவு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது, அதிக கூட்டம் வந்ததில் இருந்தே கோவை அம்மாவின் கோட்டை என்பதை ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் பல்வேறு கட்சிகளும் அதை பற்றி பேசி வந்தனர். ஆனால் தற்போது ராஜபக்சே திமுக - காங்கிரஸ்தான் காரணம் என அறிக்கை வெளியிட்ட பின்னரும் எந்தக் கட்சியும் வாய் திறக்கவில்லை என சுட்டிக்காட்டினார். ராஜபக்சே தெரிவித்தது பற்றி ஸ்டாலினும் எதுவும் கூறவில்லை எனவும் தெரிவித்தார். இலங்கையில் போர் நடந்தபோது, மெரினாவில் ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு போர் முடிந்தது என அறிவித்தவர் கருணாநிதி எனக் கூறிய அவர், இதனை நம்பி மறைவில் இருந்து வெளியே வந்த 50 ஆயிரம் தமிழர்கள் தான் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முதல்வராக இருந்த கருணாநிதியும், துணை முதல்வராக இருந்த ஸ்டாலினும்தான் காரணம் எனக் குற்றம்சாட்டினார். இந்தப் படுகொலைக்கு காரணமான திமுக காங்கிஸை போர் குற்றவாளிகளாக மத்திய அரசு ஐ.நாவும் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் தினகரன் போல் பின் வாசலில் வந்தவர். எடப்படி பழனிச்சாமி அப்படி இல்லை எனவும், யார் வேண்டுமானலும் எளிமையாக முதல்வரை சந்திக்கலாம் எனக் கூறிய அவர், எங்களை சிங்கம் போல அம்மா உருவாக்கி உள்ளார். நாங்கள் திமுகவிற்கு அஞ்சமாட்டோம் எனத் தெரிவித்தார். எதை டெண்டர் விட்டாலும் ஊழல் என்கின்றனர், எதை வேண்டுமானாலும் ஊழல் என பேப்பர் கொடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். எங்களுக்கு கடமை உள்ளது. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார்.
ஊழல் செய்துள்ளதாக ஸ்டாலின் கூறி உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கட்சி பதவி மற்று அமைச்சர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். அதே போல நிரூபிக்கப்படாவிட்டால் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் என்ற பதவியையும், திமுக தலைவர் என்ற பதவியையும் ராஜினாமா செய்ய தயாரா என சவால் விடுத்தார். பின் திமுக கொடுத்தது, மின் வெட்டு மட்டும்தான் எனவும் அதனை சரி செய்தது அமைச்சர் தங்கமணிதான் எனவும் அவர் தெரிவித்தார்.