இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்தார்.
ராஜபட்சவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் நிலவி வந்த போது, அதிபர் சிறிசேன திடீரென நாடாளுமன்றத்தை கலைத்தார். ஜனவரி மாதம் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே சிறிசேன திடீரென நாடாளுமன்றத்தை கலைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கும் தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக பல்வேறு திருப்பு முனைகள் அரங்கேறி வருகிறது.