டிரெண்டிங்

ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடி

rajakannan

ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேனா திடீரென பதவி பிரமாணம் செய்து வந்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரு நாட்டிற்கு ஒரே நேரத்தில் இரண்டு பிரதமராக என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், இலங்கை தாண்டி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நவம்பர் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரி சபாநாயகர் கரு ஜெயசூரியாவுக்கு விக்ரமசிங்கே கடிதம் எழுதினார். ஆனால், திடீர் திருப்பமாக நவம்பர் 16 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரதமருக்கான பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. 

இந்நிலையில், தன்னிடம் ஆலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தை முடக்கியிருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜெயசூர்யா கூறியுள்ளார். அதிபர் சிறிசேனாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்புகளை ரத்து செய்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கிவைப்பது நாட்டில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்; இதனை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் இந்த கடிதம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும், அதிபர் சிறிசேனா இந்த கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்தே அடுத்த அரசியல் நிகழ்வு என்ன என்பது தெரிய வரும்.