டிரெண்டிங்

மணீஷ் பாண்டே அரைசதம்... ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

jagadeesh

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது.

துபாயில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே மிகவும் மெதுவான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தனர்.

ஒருகட்டத்தில் பேர்ஸ்டோ 16 ரன்களில் இளம் வீரர் கார்த்திக் தியாகி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினர். இந்நிலையில் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடர்ந்து மணீஷ் பாண்டே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை விளையாடி அரை சதம் கடந்தார். அவருக்கு துணையாக கேன் வில்லியம்சன் ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது உனாட்கத் பந்துவீச்சில் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் மற்றும் ப்ரியம் கர்கின் காரணமாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தனர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் காண்கிறது ராஜஸ்தான் அணி.