டிரெண்டிங்

சபாநாயகர் நோட்டீஸ்: விளக்கம் கேட்க கோட்டைக்கு செல்லும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்

Rasus

சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பாக விளக்கம் கேட்ட தலைமைச் செயலகத்திற்கு இன்று மாலை செல்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடந்த 22 ஆம் தேடி கடிதம் கொடுத்த நிலையில், இன்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தொலைபேசி வாயிலாக புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “சபாநாயகர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் தொடர்பாக எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்கத்தான் தலைமைச் செயலகம் செல்லவுள்ளோம். கடிதம் கொடுக்க அல்ல” என்றார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் எனக் கேட்டபோது, “எங்களின் கோரிக்கையே முதலமைச்சர் மற்றும் ஊழல் கறை பிடித்த அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்பதுதான். புதிய முதலமைச்சர், நல்ல அமைச்சரவை அமைத்து ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்றார்.

கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்த நிலையில் தினகரன் ஆதரவு 19 அதிமுக எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.