டிரெண்டிங்

ஜெயப்பிரதா பற்றி சர்ச்சைப் பேச்சு: சமாஜ்வாதி தலைவருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

webteam

பாஜக வேட்பாளரும் நடிகையுமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சமாஜ்வாதி தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா. இவருக்கு பாஜக சார்பில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் அவர் இரண்டு முறை சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில் சம்பல் மாவட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் பெரோஸ் கான், ஜெயப்பிரதா நன்றாக நடனமாடக்கூடியவர், அவரது பரப்புரை யால் ராம்பூர் மக்களுக்கு மாலை நேரம் வண்ண மயமாக மாறு‌ம் என பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து பெரோஸ் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் பெரோஸ் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே தேர்தல் பரப்புரையின் போது பெண்கள் குறித்து விமர்சித்து பேச வேண்டாம் என தொண்டர்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.