டிரெண்டிங்

ஏழை மாணவி படிப்பை தொடர வீணை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்கள்

kaleelrahman

வேதாரண்யம் அருகே உள்ள மருதூரில் வறுமையால் இசைபடிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு சமூக ஆர்வலர்கள் வீணை இசைக்கருவியை வழங்கி உதவி செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி அன்புமணி. இவருடைய தந்தை கோவிந்தராசு ஐந்தாண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் தாய் சுமதி அங்கன்வாடியில் வேலை பார்த்து அன்புமணியையும் மற்ற மூன்று மகள்களையும் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்து வருகிறார். 

இசையில் அதிக ஆர்வமுடைய அன்புமணி 12ஆம் வகுப்பு முடித்து விட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு குரலிசை வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். வீணை இசைக் கருவி இருந்தால்தான் இசை வகுப்பில் சேரமுடியும் என்ற நிலையில் வறுமையின் காரணமாக வீணை வாங்க முடியாமல் அன்புமணி கவலையில் இருந்தார். 

மாணவி அன்புமணி வீணை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த விபரம் அந்த பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியானது. இசைபடிப்பு பயில வறுமை தடையாக இருப்பதை அறிந்த சிங்கப்பூரில் உள்ள மதிப்புக்குரியவர்கள் அறக்கட்டளையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாணவி அன்புமணி இசை இளங்கலை வகுப்பில் சேர்வதற்கு வசதியாக ரூ 25 ஆயிரத்திற்கு வீணை வாங்கி வழங்கி உள்ளனர். இந்த நிலையில் இசையில் ஆர்வமுடைய மாணவி அன்புமணி இசை படிப்பை தொடர அரசின் உதவியை எதிர்பார்த்து உள்ளார்