5 TYPES OF FROGS FOUND IN HIMALAYAS  X - SD Biju
டிரெண்டிங்

இமயமலைக் காடுகளில் இத்தனை அதிசயங்களா? இதுவரை கண்டறியப்படாத 5 புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 5 புதிய கொம்புத் தவளை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நில நத்தைகளை உணவாக உட்கொள்ளும் தவளை இனம் இந்தியாவில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

இமயமலைக் காடுகளுக்குள் ஒளிந்திருந்த ஐந்து புதிய கொம்புத் தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நத்தைகளையே உணவாக உட்கொள்ளும் வித்தியாசமான தவளையும் இந்தியாவில் முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, இமயமலையின் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட ஐந்து தவளைகளும் Jingophrys என்ற சிறிய கொம்புத் தவளைக் குழுவைச் சேர்ந்தவை. அவற்றுக்கு Jingophrys taniitatii, Jingophrys tanogogo, Jingophrys siangensis, Jingophrys hrdy, Jingophrys wularsoni எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தக் குழுவில் இதுவரை அறியப்பட்ட தவளை இனங்களின் எண்ணிக்கை இருமடங்குக்கும் அதிகமாகியுள்ளது.

Jingophrys tanogogo

இந்த ஐந்து தவளைகளில் மிகவும் வித்தியாசமானது Jingophrys தானோகோகோ எனப்படும் நத்தைகளை உணவாக உட்கொள்ளும் தவளை. இந்தத் தவளையின் வயிற்றில் முழுமையான நில நத்தைகளின் ஓடுகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நத்தைகளை உண்ணும் தவளை இனம் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட தவளைகளின் பெயர்களும் அவற்றின் பின்னணியை கொண்டு சுவாரசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் ஜிரோ பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் Tanii பழங்குடியின மக்களையும், அபடானி மொழியில் தவளையைக் குறிக்கும் Tatii என்ற சொல்லையும் இணைத்து Jingophrys taniitatii என்ற தவளை இனப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

Jingophrys yeae

இந்த ஐந்து தவளைகளையும் புதிய இனங்களாக உறுதிப்படுத்துவதற்கு ஆராய்ச்சியாளர்கள் DNA மரபணு ஆய்வு, உடல் அமைப்பு ஒப்பீடு மற்றும் ஆண் தவளைகளின் இனப்பெருக்க அழைப்பொலி ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு தவளைகளின் புதிய இனங்களை அடையாளம் கண்டதோடு, அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்தும் தகவல்களை அளித்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை உயர்ந்ததும், ஆசியப் பருவமழை உருவானதும் இந்தப் பகுதியில் தவளைகள் பல புதிய இனங்களாகப் பரிணமிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என DNA ஆய்வு தெரிவிக்கிறது. இதன்மூலம் தவளைகளின் பரிணாம வளர்ச்சியில் இமயமலை முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Jingophrys zhaoermii Huang

உலகின் உயிரினப் பன்மை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக இமயமலை இருந்தாலும், இமயமலையின் பல தொலைதூரக் காடுகள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட சில தவளைகள், இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே குறுகிய காலத்துக்குத் தென்படும் அளவுக்கு மறைவாக வாழ்கின்றன. இந்தத் தவளைகளைக் கண்டறிய உள்ளூர் பழங்குடியின மக்களின் அறிவும் களப்பணி உதவியும் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்று இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.டி. பிஜு தெரிவித்துள்ளார்.

இந்தத் தவளைகளின் வாழ்வியல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் புரிந்துகொள்ள மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொம்புத் தவளைகளில் இதுவரை மறைந்திருந்த இருமடங்கு இனப் பன்மை என்ற தலைப்பிலான இந்த ஆய்வு நவம்பர் 11ஆம் தேதி Royal Society Open Science ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான ஆய்வுக் கட்டுரையைப் படிக்க