சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது மலைவாழ் மக்கள் மைதானத்திற்குள் பாம்புகளை விடலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தோடு மட்டுமில்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட்டை நேரில் காணச் செல்லும் ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட கண்டிசன்கள் விதிக்கப்பட்டுள்ளன. பேக், சூட்கேஸ்கள், செல்போன்கள், மடிக்கணினி, ரிமோட்டில் இயங்கும் கார் சாவி உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது என ஏகப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது மலைவாழ் மக்கள் மைதானத்திற்குள் பாம்புகளை விடலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மலையில் உள்ள நாகப்பாம்புகளை கொண்டுவந்து மலைவாழ் மக்கள் மைதானத்திற்குள் விடப்போகிறார்கள். இந்த பாம்பை பிடிக்க விளையாட்டு வீரர்களும், தமிழ்நாடு காவல்துறையும் ஐபிஎல் விளையாடப் போறாங்க. நாங்கள் வேடிக்கை பார்க்கப் போகிறோம். நூற்றுக்கணக்கான பாம்பை விடப் போவதாக சொல்லிக்கொண்டு உள்ளார்கள். வாட்ஸ்ஆப்பிலும் செய்தி வருகிறது. மைதானத்திற்குள் நுழைய பல விதிகள் உள்ளன. ஆனால் பாம்பை கொண்டு செல்ல தடையில்லை” என்றார்.