டிரெண்டிங்

மோர், சமோசா நொறுக்குத் தீனியுடன் லஞ்ச் ப்ரேக்: நடனத்துடன் களைகட்டியது அதிமுக உண்ணாவிரதம்..!

மோர், சமோசா நொறுக்குத் தீனியுடன் லஞ்ச் ப்ரேக்: நடனத்துடன் களைகட்டியது அதிமுக உண்ணாவிரதம்..!

Rasus

உண்ணாவிரதப் போராட்டத்தை வேர்க்கடலை, மோர், சமோசா என நொறுக்குத் தீனியுடன் செமையாக அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்தோடு உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் என பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் குஷியாக காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது வருத்தமான விஷயம்தான்.

உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால கெடுவிற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தமிழகமே போராட்டக் களமாக மாறிவிட்டது எனச் சொல்லக்கூடிய அளவிற்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போதாக்குறைக்கு இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்து வணிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருந்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால் அவசர தேவைக்கு 044-28191522 என்ற எண்ணை அழைத்தால், மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆளும் அதிமுக அரசும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது.

அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரப் போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ், போராட்டம் வெற்றி பெறும் எனக் கூறினார்.

இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் தொண்டர்கள் பலரும் வேர்க்கடலை, சமோசா, என வாய்க்கு ருசியாக நொறுக்குத் தீனி சாப்பிட்டு வருவது தெரியவந்துள்ளது. முன்னதாக போராட்டம் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் முன்பே சமூக வலைத்தளங்களில் பலரும், ‘காலையில் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் தொடங்குகிறார்கள். இதெல்லாம் ஒரு உண்ணாவிரதமா.. உண்மையான அக்கறை இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடட்டும்” என விமர்ச்சித்து வந்தனர். இதனிடையே போராட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் தொண்டர்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் விரும்பியதை சாப்பிட்டு வருகின்றனர். மக்களின் வாழ்வாதத்திற்கு தேவைக்கான தண்ணீரை பெறுவதற்கும், அதற்கான நீதிமன்ற உத்தவை பின்பற்றாமல் இழுத்தடிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும்  உண்ணாவிரதப் போராட்டம் ஒரு உணர்வுப்பூர்வமான போராட்டமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய அதிமுகவின் உண்ணாவிரப் போராட்டதிலோ, நொறுக்குத் தீனியோடு சினிமா பாடலுக்கும் நடனம் ஆடி தொண்டர்கள் குஷியாக காணப்படுகின்றனர். ‘துள்ளுவதே இளமை... தேடுவதோ தனிமை’... ‘ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..’ போன்ற பாடலுக்கு தொண்டர்கள் உற்சாக நடனம் ஆடுவதை காண முடிந்தது.

இதனிடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் லஞ்ச் பிரேக் செல்கிறோம் என சொல்விட்டு சாப்பாட்டு நேரம் வந்ததும் தொண்டர்கள் கிளம்பிவிட்டனர். இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆட்கள் குறைந்துவிட்டனர். சமூக வலைத்தளவாசிகள் விமர்சித்தது என்னவோ, ‘உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உணவை முடித்துவிட்டு வருகிறார்கள்’ என்றுதான். ஆனால் அதிமுக தொண்டர்களோ ஒருபடி மேலே சென்று உண்ணாவிரதப் போராட்டத்திலே சுவையான நொறுக்குத் தீனிகளை நாக்கு ருசியாக சாப்பிட்டு என்ஜாய் செய்துவருகின்றனர்.