தமிழகத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் காரணமாகவும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவில் கீழணையில் 12 சென்டி மீட்டரும், மயிலாடுதுறை, ஆணைக்காரன்சத்திரம், லால்பேட்டை ஆகிய இடங்களில் தலா 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.