நேற்றைய போட்டியில் டெல்லி அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நடப்பு சீசனில் அடுத்தடுத்த இரு தோல்விகளால் துவண்டிருந்த ஹைதராபாத் அணி, முதல் வெற்றியை பதிவு செய்யும் வேட்கையுடன் டெல்லி அணியுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது.
163 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே பிரித்வி ஷாவின் விக்கெட்டை இழந்தது. மற்றொரு தொடக்க வீரரான தவன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்தது. தவன் 34 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கீழ் வரிசையில் இறங்கிய வீரர்களும் சோபிக்காத நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.