டிரெண்டிங்

இலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

இலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

rajakannan

இலங்கையின் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். 

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா திடீரென பதவி பிரமாணம் செய்து வந்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரு நாட்டிற்கு ஒரே நேரத்தில் இரண்டு பிரதமராக என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், இலங்கை தாண்டி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நவம்பர் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரி சபாநாயகர் கரு ஜெயசூரியாவுக்கு விக்ரமசிங்கே கடிதம் எழுதினார். ஆனால், திடீர் திருப்பமாக நவம்பர் 16 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரதமருக்கான பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. 

இதனிடையே, தன்னிடம் ஆலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தை முடக்கியிருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜெயசூர்யா கூறியிருந்தார். அதிபர் சிறிசேனாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், இலங்கையின் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெட்ரோலிய அமைச்சர் ரணதுங்கவின் பாதுகாவலர் ஆவணங்களை எடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிசேனா உத்தரவுக்கு பின்னர் அமைச்சரவை களைந்துவிட்டதாக ராஜபட்சே ஆதரவாளர்கள் பாதுகாவலரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நீக்கிய பின்னர் நடைபெறும் முதல் வன்முறை சம்பவம் இதுவாகும். சூட்டில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் ஊழியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எப்பொழுது, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டாரோ அப்பொழுதே அவரது அமைச்சரவை களைந்துவிட்டதாக ராஜபட்சே ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, நாளை ராஜபட்சே தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.