மனைவி சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. சசிதரூரை திருமணம் செய்த 3 வருடம் 3 மாதங்களுக்குள் இந்த மரணம் நிகழ்ந்தது. டெல்லி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி போலீசார் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதை போலீசார் உறுதி செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சசிதரூர் தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்தியதாக டெல்லி போலீசார் அதில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கு தொடர்பான குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சசிதரூர் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து சசிதரூர் கூறுகையில், “டெல்லி போலீசாரின் செயல் நம்ப முடியாதது மட்டுமல்ல. அபத்தமானது” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை மே 24ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.