வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
17ஆவது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இந்திய முழுவதும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டிவருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அக்கட்சியின் தலைவர் சரத் பவார், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஏனென்றால் என்னுடைய குடும்பத்திலிருந்து இரண்டு நபர்கள் வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இதனால் நான் இந்தத் தேர்தலில் நிற்க போவதில்லை”எனத் தெரிவித்தார்.
அத்துடன் சரத் பவாரின் பேரனான பார்த் பவார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் தெரியவந்துள்ளது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மகாரஷ்டிராவிலுள்ள மாதா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.