17 வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 17 வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக்கட்டமான 7 வது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவை தொடர்ந்து வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம்,பஞ்சாப், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், இமாசலப்பிரதேசத்தின் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சண்டிகரில் ஒரு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.