டிரெண்டிங்

“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்

“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்

rajakannan

தங்கள் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாஜக மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்பதுதான் காங்கிரசின் ஒரே நோக்கம் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 19ம் தேதி 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும்   பிரதமர் வேட்பாளர்  யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மோடி பிரதமர் வேட்பாளராக உள்ளார். ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்த போதும் காங்கிரஸ் மவுனமாகவே இருந்தது. தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றே கூறியது.

இந்நிலையில், தங்கள் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாஜக மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்பதுதான் தங்களின் ஒரே நோக்கம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் பேசிய அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எதிர்க்கட்சிகள் கருத்தொற்றுமையுடன் தங்களுக்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். 

காங்கிரசுக்கு பிரதமர் பதவிக்கு கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டாலும் அதை தாங்கள் ஒரு பிரச்னையாக்க மாட்டோம் என்றும், பாஜகவை தடுப்பதே தங்களின் பிரதான நோக்கம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்கத் தயாரா என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்திருந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் கருத்து வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள காங்கிரஸ், அதில் பங்கேற்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாஜக அணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய்‌ எஸ் ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்தகைய சூழலில் குலாம் நபி ஆசாத் இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளார்.