சீமானுக்கு என்னை தெரியும், எனது சினிமாவை தெரியும், ஆனால் எனது கொள்கை தெரியாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாளை புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்திற்குச் சென்று பூங்கொத்து அளித்து சீமான் வாழ்த்துக் கூறினார். அரசியல் பயணம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துப் பெற்றிருந்தார். இந்த நிலையில் நடிகர் சீமான் நேரில் வந்து கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கமல்ஹாசனுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு கமல்ஹாசன் இடைமறித்து பதில் அளித்தார். கமல்ஹாசன் கூறுகையில், “சீமானுக்கு என்னை தெரியும், எனது சினிமாவை தெரியும், ஆனால் எனது கொள்கை பற்றி தெரியாது. நான் அங்கும் இங்கும் பேசும் சில வார்த்தைகளில் இருந்து சிலவற்றை புரிந்து கொள்ள முடியும். முழுவதுமாக புரிந்திருக்க வாய்ப்பில்லை. கொள்கைகள் குறித்து நாளை மதுரை மாநாட்டில் நான் பிரகடனப்படுத்துவதை வைத்து அவர் தனது முடிவை தெரிவிப்பது நாணயம். அதுதான் சரியாக இருக்கும்” என்றார்.