கரும்பு விவசாயி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் எங்களது சின்னம் தெளிவாக இல்லை. எங்களது வளர்ச்சியை தடுக்க சின்னத்தை மங்கலாக்கி விட்டனர். சுயேச்சை சின்னம் கூட தெளிவாக தெரிகிறது. ஆனால் எங்கள் சின்னத்தை மட்டும் மங்கலாக்கி வைக்க என்ன காரணம்? மண்ணை காக்க போராடும் எங்களைப் போன்ற கட்சிகள் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைகிறார்கள்.
தரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறதே தவிர, தலைமைகளை தேர்வு செய்வதில்லை. முதலாளிகளுக்கான அஸ்திவாரம்தான் திரும்பத் திரும்ப கட்டமைக்கப்படுகிறது. திட்டமிட்டு எங்கள் சின்னத்தை தெளிவற்ற நிலையில் பதித்துள்ளனர். எங்கே கூட்டம் நடத்தினால் ஆட்கள் வரமாட்டார்களோ அங்கு கூட்டம் நடத்த அனுமதி தருவார்கள். என்னால் அவர்களுக்கு பிரச்னை வரும். சுயேச்சையால் வர வாய்ப்பில்லை. அதனால் என்னை அடக்குமுறை செய்கிறார்கள். இதையெல்லாம் மீறிதான் மேலே எழுந்து வந்து கொண்டிருக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் மேல் நான் குற்றம் சாட்டுகிறேன். திட்டமிட்ட மறைப்புதான் இது. தேர்தல் ஆணையமே ஒரு ஏமாற்று வேலை தானே. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் ஏன் தடுக்கவில்லை. பணப்பட்டுவாடா செய்து சிறைக்கு சென்றது எத்தனை பேர்? பணப்பட்டுவாடா எனக்கூறி தேர்தலை ரத்து செய்யும்போது அதற்காக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை என்ன? சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.
வேலூரில் துரைமுருகன் வீட்டில் மட்டும் தான் பணம் இருந்ததா? வேறு எங்குமே பணம் இல்லையா? அதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? மற்றவர்கள் எல்லாரும் நேர்மையாக தேர்தலை சந்திக்கிறார்களா? பறக்கும் படை மூலம் மக்களின் பணத்தைத்தான் ஆணையம் பறிக்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை.
பின்வரும் தலைமுறைக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு மட்டுமே வரும். பற்று வராது. சின்னம் தெளிவாக இல்லை என்று உச்சநீதிமன்றம் சென்றால் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்கள். இனிமேல் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி மக்கள் மன்றம் தான். அதனால் பத்திரிகையாளர்கள் மூலம் எங்கள் சின்னத்தை மக்களிடையே சேர்க்கலாம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.