பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது உள்ளங்கனி நெல்லிக்கனி போல தெரிவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். உட்கட்சி பிரச்னை எனக்கூறி இந்த அரசை நீடிக்கச் செய்ய மத்திய அரசும் ஆளுநரும் உள்நோக்கத்துடன் அமைதி காப்பது, சட்ட விரோதம் மட்டுமின்றி, சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு உலை வைக்கும் கேலிக்கூத்து என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு திமுகவும், மற்ற எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த பிறகும், பெரும்பான்மையில்லாத அரசு நீடிக்க மத்திய பாஜக அரசும், உள்துறை அமைச்சகமும் உதவி செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், கூட்டப்பட்ட ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் பங்கேற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கூறியிருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தொடுத்த வழக்கில், அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் முதலமைச்சரை ஆதரிக்க வேண்டியதில்லை என்று அரசு தரப்பில் கருத்தைக் கூறியிருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், இதன்மூலம் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பே ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதற்குப் பிறகும் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடாதது சட்டவிரோத அரசு நடக்க ஆதரவு தருவாக உள்ளது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எனவே, பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, முதலமைச்சரோ, அமைச்சர்களோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுத்தால் தலைமைச் செயலாளர் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்ட விரோதம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.