லிங்காயத் மதம் பிரிக்கப்படும் பட்சத்தில் அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருக்காது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பரவலாக வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர், தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக நாகமோகன் தாஸ் தலைமையில் அம்மாநில அரசு தனி கமிட்டி அமைத்திருந்தது. நாகமோகன் தாஸ் கமிட்டி பரிந்துரையின் பெயரில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அம்மாநில அமைச்சரவை நேற்று அங்கீகரித்தது. மேலும், மத்திய அரசுக்கு மாநில அரசு இதே கோரிக்கையை பரிந்துரை செய்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால், “2013ஆம் ஆண்டு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், ‘லிங்காயத்துகளுக்கு தனி மத அடையாளம் கொடுப்பது சமுதாயத்தில் பிரிவினைக்கு வழி வகுத்துவிடும். வீர சைவர் மற்றும் லிங்காயத்தில் உள்ளவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும்’ என்று முடிவு செய்து கோரிக்கையை நிராகரித்தது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பாஜக தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக ஆவதை தடுக்கும் பொருட்டே கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த அரசியல் விளையாட்டை மேற்கொண்டுள்ளது” என்றார்.