டிரெண்டிங்

பரபரக்கும் அதிமுக: 3 அணிகளும் தனித்தனியாக ஆலோசனை

பரபரக்கும் அதிமுக: 3 அணிகளும் தனித்தனியாக ஆலோசனை

Rasus

அதிமுகவின் மூன்று அணிகளும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியினர் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனக் கூறினார். இது அதிமுக அணிகள் இணைப்புக்கான முன்னெடுப்பாக கருதப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் விரைவில் இணையும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பழனிசாமி அறிவிப்பு குறித்து முடிவெடுக்க ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதற்காக ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், அணிகள் இணைப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக ஈபிஎஸ் அணியிடம் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முதலமைச்சர் பழனிசாமியும் மூத்த அமைச்சர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் திருச்சி பயணத்தை ரத்து செய்து விட்டு  அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சர் இல்லத்திற்கு விரைந்துள்ளார்.

இதேபோல் சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் 14 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பாலசுப்பிரமணியன், பார்த்திபன், பழனியப்பன் உள்பட பலர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.