கர்நாடகத்தில் முதலமைச்சர் எடியூரப்பா, இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான வழிமுறைகளையும் நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கெடுப்பானது ரகசிய வாக்கெடுப்பாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் கர்நாடக மாநில டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து எம்எல்ஏக்களும் கட்டாயம் பதவி ஏற்க வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து முடிவு கிடைக்கும்வரை அரசு சார்ந்த முடிவுகளை எடியூரப்பா எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர். மூத்த எம்எல்ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுத்து வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், கால தாமதமின்றி இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை நியமன எம்எல்ஏவை ஆளுநர் நியமிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
கர்நாடக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கே.ஜி.போபைய்யாவை நியமித்து ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று பதவியேற்று கொண்டார்.
கர்நாடக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 111 உறுப்பினர்களின் ஆதரவு இப்போது தேவை. பாஜகவிடம் 104 உறுப்பினர்கள் உள்ளனர். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் உள்ளனர்.கர்நாடக பேரவை உறுப்பினர்களில் எத்தனைபேர் பேரவைக்கு வருவார்கள், எத்தனை பேர் ராஜினாமா செய்வார்கள்? எத்தனை பேர் கொறடாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தங்கள் அணிக்கு வாக்களிப்பார்கள் என்பதே எடியூரப்பா ஆட்சி நிலைக்குமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும்.
ஒருவேளை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் 14 எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வரவில்லை என்றாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது காங். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவுக்கு வாக்களித்தாலோ எடியூரப்பா அரசு நிலைக்கும். அணி மாறிய எம்.எல்.ஏக்கள் பின்னர் பதவி நீக்கப்படலாம், ஆனால் வாக்களித்தது வாக்களித்ததுதான்.