தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்திவருகிறார்.
தமிழகத்தை பொருத்தவரை, தேர்தல் காலங்களில் பணம் பட்டுவாடா என்பது அதிகமாக இருக்கும். நேற்றுவரை மட்டுமே தமிழகத்தில் 146 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுபொருட்கள் மற்றும் மதுபானங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் மட்டுமே 56 கோடி ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 7 முதல் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றநிலை பகுதிகளில் உள்ளன.
இதனால் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு இதுகுறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.