டிரெண்டிங்

சசிகலா உடல் நலம் விசாரிக்கவே சென்றோம்....நீதிமன்றத்தில் அமைச்சர்கள் விளக்கம்

சசிகலா உடல் நலம் விசாரிக்கவே சென்றோம்....நீதிமன்றத்தில் அமைச்சர்கள் விளக்கம்

Rasus

சசிகலாவை பெங்களூரு சிறையில் சென்று சந்தித்தது குறித்த வழக்கில், அவரது உடல் நலம் விசாரிக்கத்தான் சென்றோம் என அமைச்சர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

ஸ்ரீவில்லிப்புதூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஆணழகன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவை, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜ் ஆகியோர் சந்தித்து, அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பதவியேற்பின் போது எடுத்த ரகசிய காப்பு உறுதிமொழிக்கு எதிரானது என கூறியிருந்த மனுதாரர், அமைச்சர்கள் சசிகலாவை சிறைக்குச் சென்று சந்தித்ததற்கு முதலமைச்சர் பழனிசாமியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். 

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இந்த செயல்பாடு அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையிலுள்ளதால் அவர்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணழகன் தனது மனுவில் கோரியிருந்தார். 

நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவோ, தான் எடுத்த ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியோ செயல்படவில்லை என முதலமைச்சர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சிறையில் சந்தித்ததாக அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.