சசிகலா சிறைக்கு வெளியே சென்றுவிட்டு வந்ததற்கான வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு திவாகரனின் மகன் ஜெயானந்தும், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறையிலிருந்து வெளியே சென்றதற்கான ஆதாரங்களை, கர்நாடக மாநில சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, ஊழல் தடுப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பான பிரத்யேக காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில், சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில், சிறையின் பிரதான வாயிலுக்குள் நுழைவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் கையில் பை ஒன்றை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "சிறையில் இருந்து பார்வையாளர்கள் அறைக்கு வர வேண்டும் என்றால் 500 மீட்டர் தூரம் வரை நடந்துவர வேண்டும். அங்கே கேட் ஒன்றும் இருக்கும். பார்வையாளர்களை சந்திக்க சசிகலா வந்த வீடியோவைத்தான் அவர்கள், வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறியுள்ளனர். டிஐஜி ரூபா ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். இந்த வீடியோ கிராபிக்ஸ் இல்லை. ஆனால் இது பார்வையாளர்களை சந்திக்க வருவதற்கான வீடியோதான். நாளை சீராய்வு மனு விசாரணைக்கு வருகிறது. எனவே திட்டமிட்டு இதுபோன்று வீடியோக்கள் மீடியாக்களில் வெளிவருகின்றன" என்றார்.
இதுதொடர்பாக பேசிய புகழேந்தி, " அந்த வீடியோவில், அருகில் கைதி ஒருவர் சீருடையில் நிற்கிறார். அவர்களுக்கான பணியாளர்களும் நிற்கிறார்கள். பார்வையாளர்களை சசிகலா சந்திக்க வந்ததற்கான வீடியோ அது. அங்கு போலீஸ்காரர்களும் நிற்கிறார்கள். பார்வையாளர்கள் பார்க்க வந்துவிட்டு திரும்ப செல்வதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.