மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பன்னீர்செல்வம், தம்பிதுரை, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சந்தித்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டினர். இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். சிறையில் இருந்த சசிகலா இந்த விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் ஜெயலலிதா குறித்த பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போலோவில் இருந்த போது யார் யார் எல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22, 2016 இரவு 9.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது படுக்கை அறையில் நினைவின்றி மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் சிவக்குமார் அப்போலோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அப்போலோவில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. உடனடியாக இதுதொடர்பாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளில் ட்ராஃபிக் சரி செய்யப்பட்டது. ஆம்புலன்ஸில் நினைவு திரும்பிய ஜெயலலிதா எங்கு செல்கிறோம் என சசிகலாவிடம் கேட்டதாகவும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. 10 -15 நிமிடத்திற்குள் மருத்துவமனையை அடைந்து விட்டதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பால் ஜெயலலிதா மன அழுத்தத்தில் இருந்தார். சிறையில் மன வேதனையுடனே காணப்பட்டார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரித்தது.விடுதலையான பின்னரும் மன வேதனையுடனே காணப்பட்டார். மனஅழுத்தமே அவரது உடல்நிலை மோசமானதற்கு காரணம். உடல்நலனை கருத்தில் கொண்டுதான் அவர் ஆர்.கே.நகரில் போட்டியிட்டார். தேர்தல் வெற்றிக்கு பிறகும் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16ஆம் தேதி வரை மாத்திரை சாப்பிட்டார். 19ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது. அவர் இறுதியாக பொது நிகழ்ச்சியில் செப்டம்பர் 21ஆம் தேதி கலந்துக்கொண்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அக்டோபர் 22ஆம் தேதி அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார்.அதிமுக தலைவர்கள் ஓபன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22 -27ஆம் தேதிகளில் சந்தித்தனர். செப்டம்பர் 27ஆம் தேதி தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளான பெருமாள்சாமி மற்றும் வீரபெருமாளை சந்தித்தார். அப்போது அவர்களிடம் ‘நான் நலமுடன் இருக்கிறேன், சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நாம் வீட்டிற்கு சென்று விடலாம்’ எனக் கூறியதாக சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் உடல்நலத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் தான் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. அவரின் அனுமதியோடுதான் சிகிச்சை பெறும் 4வீடியோக்கள் எடுக்கப்பட்டது என சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தி இந்து ஆங்கில நாளிதழிலில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.