தினகரன் தலைமையை ஏற்று உழைக்கத் தயாராக உள்ளோம் என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். நேற்று தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா சந்தித்து பேசினார். நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து பேசினார்.
டிடிவி தினகரனுடனான சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா, ஆர்.கே. நகரில் அண்ணன் தினகரன் இமலாய வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆளும் கட்சியை எதிர்த்து தினகரன் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சாமல் நின்று போராடி வென்றுள்ளார். ஆர்.கே.நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தினகரன் தலைமையை ஏற்று உழைக்கத் தயாராக உள்ளோம் என்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா கூறினார்.
ஜெயலலிதாவும், சசிகலாவும் தன்னைத் தாக்கியதாக பரபரப்பு புகார் கூறியிருந்த சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது