டிரெண்டிங்

சசிகலா சிறை வீடியோக்கள் உண்மையே: டிஐஜி ரூபா

சசிகலா சிறை வீடியோக்கள் உண்மையே: டிஐஜி ரூபா

webteam

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் உண்மையே என டிஐஜி ரூபா புதியதலைமுறைக்கு தொலைபேசி மூலமாக அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 

டிஐஜி ரூபா அளித்த தொலைபேசிப் பேட்டியில், "பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சென்று ஆய்வு நடத்த யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. சிறைக்கு நானே நேரில் சென்றேன். எனக்கு சில விஷயங்கள் தெரிய வேண்டி இருந்தது. சில சம்பவங்கள் குறித்து எனக்குத் தெரிய வந்தது. அதனை விசாரிக்கச் சென்றேன். நான் எனது மேலதிகாரிக்கு மட்டும்தான் இதுகுறித்து அறிக்கை அளித்தேன். இரண்டொரு முறை இவ்விவகாரம் குறித்து அவரிடம் சொன்னேன். அவர் என்னைப் பேசவே அனுமதிக்கவில்லை. நடந்தவை என்னவென்று அவரிடம் விவரித்தேன். ஆனால் அவற்றை அவர் கேட்கவில்லை. நான் சொன்ன எதையும் அவர் கேட்காததால் எழுத்துப் பூர்வமாக அனைத்தையும் அளிக்க வேண்டியதாயிற்று. இதுதான் நடந்தது."

"இரண்டாவது அறிக்கையில் அனைத்து நிகழ்வுகளையும் விவரித்துள்ளேன். என்னவெல்லாம் ஆதாரங்கள் உள்ளன என்பது குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளேன். கன்னடத் தொலைக்காட்சிகளில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன. பல காட்சிகள் வெளியாகி உள்ளன. சிறையில் உள்ள சிலரே நிழற்படங்களை எடுத்து வெளியிட்டிருப்பார்கள் எனக் கருதுகிறேன். அவை ஊடகங்களிலும் வெளியாகின்றன. எனவே அவை அனைத்தும் உண்மையே. அவர் நைட்டி அணிந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். எனவே நான் அறிக்கை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. அது சரியாகவும் இருக்காது எனக் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.