முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக அம்மா மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணிகள் சார்பில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியை சார்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சசிகலா பதவி ரத்து உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் அதிமுகவினர் ஓரணியில் திரண்டதற்கு நன்றி, பாராட்டுக்களை தெரிவித்தும், இரட்டை இலையை மீட்பதாக உறுதியெடுத்தும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களே பொறுப்பில் நீடிப்பார்கள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருவதற்கு பாராட்டு, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி என 2,3,4வது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் வர்தா புயல் மற்றும் வறட்சியின்போது சிறப்பாக செயல்பட்ட அரசுக்கு பாராட்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி, ஆட்சியை காப்பாற்றி வரும் நிர்வாகிகளுக்கு பாராட்டு, ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவி இனி யாருக்கும் கிடையாது என 5,6,7வது தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி ரத்து மற்றும் அவரது நியமனங்களும் ரத்து, தினகரன் நியமனங்கள் செல்லாது, அதிமுகவில் புதிய பதவி ஏற்படுத்தப்படும் என்ற 8,9,10வது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே நிர்வாக அதிகாரங்கள் உண்டு, கட்சியின் சட்ட விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் ஏகமனதாக ஒப்புதல் என மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேறின.