25 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப்பிரதேச மாநில அரசியலில் எதிரெதிர் துருவங்களாக கருதப்படும் முலாயம் சிங் யாதவும் மாயாவதியும் ஒரே மேடையில் பரப்புரை செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக அதன் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய மாயாவதி, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் என்றும் மோடியை போல போலியான தலைவர் அல்ல என்றும் புகழ்ந்தார்.
சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தது குறித்து விளக்கம் அளித்த மாயாவதி, சில சமயங்களில் கட்சி நலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சில கடினமான முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய முலாயம் சிங் மாயாவதிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சமாஜ்வாதி தொண்டர்கள் மாயாவதிக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 1995ம்ஆண்டிலிருந்தே சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றன.
1995ல் மாயாவதியை சமாஜ்வாதி தொண்டர்கள் சிலர் தாக்கியதை அடுத்து இரு கட்சிகளும் நீண்ட காலமாக எதிரிகளாகவே இருந்து வந்தன. இந்நிலையில் சுமார் 25 ஆண்டு மோதலுக்குப் பிறகு இரு கட்சிகளும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன.