டிரெண்டிங்

சேலம்: ஊழியர்களின் அலட்சியம்... சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்.!

kaleelrahman

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்ட பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி சாலையில்தான் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்ட மருத்துவ பொருட்கள் சிதறிக் கிடந்தன. மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டிய பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் சிதறிக் கிடந்த பரிசோதனை மாதிரி பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். 

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சேலம் மற்றும் ஆத்தூர் என இரண்டு சுகாதார மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பொறுத்தவரை 8 வட்டாரங்களில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. அவ்வாறு பல்வேறு முகாம்களிலும் சேகரிக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் பெத்தநாயக்கன் பாளையம் மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 
தலைவாசல் பகுதியில் முகாம் வாயிலாக சேகரிக்கப்பட்ட மாதிரிகளை இருசக்கர வாகனம் வாயிலாக கொண்டுவரப்பட்ட போது ஊழியர்கள் தவறுதலாக சிதறவிட்டு உள்ளதாக கூறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இனிவரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.