டிரெண்டிங்

பழிக்கு பழி வாங்க முதலாளியின் வீட்டை இடித்த ஊழியருக்கு நேர்ந்த சோகம்.. என்ன ஆனது?

JananiGovindhan

நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஐ.டி. கம்பெனிகளிலேயே பெரும்பாலும் பணி நீக்கம் செய்யும் நடைமுறை இருக்கும்.

இதுப்போன்று திடீரென ஊழியர்களை வேலையை விட்டு துரத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை நிறுவனங்கள் கருத்தில் கொள்கிறதா இல்லையா என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

இதனால் சில அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடவும் தயங்குவதில்லை. அந்த வகையில் தன்னை வேலையை விட்டு நீக்கிய முதலாளியின் பங்களா வீட்டை கிரேன் மூலம் இடித்து சேதப்படுத்திய நிகழ்வு கனடா நாட்டில் நடந்திருக்கிறது.

இது தொடர்பான வீடியோவும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு பெரும் வைரலாகியிருக்கிறது. அதன்படி, கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள முஸ்கோகா என்ற ஏரிப்பகுதியில் உள்ளது, ஊழியரை பணி நீக்கம் செய்த நிறுவனரின் வீடு.

அதனை 59 வயதான பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர் கிரேன் மூலம் இடித்து தள்ளியிருக்கிறார். இதனை அதேப்பகுதியைச் சேர்ந்த டான் டாப்ஸ்காட் என்பவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தகவல் அறிந்து வந்த கனடா போலீஸ், வீட்டை சேதப்படுத்திய முன்னாள் ஊழியரை கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5,000 டாலர் அதாவது 395,442 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு மீண்டும் ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தன்னுடைய வீட்டை மட்டுமல்லாது அண்டை வீட்டையும் அந்த ஊழியர் சேதப்படுத்தியிருக்கிறார் என்றும், அதனை சீரமைக்க பல மில்லியன் கணக்கில் செலவாகும் எனவும் வீட்டின் உரிமையாளரான நிறுவனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.