முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சகோதரர்களாக இணைந்து செயல்பட்டு கட்சியை வழிநடத்தி வருவதாகவும் அவர்களை பிரிக்க நினைத்தால் அது நடக்காது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறினார். “ஒபிஎஸ், இபிஎஸ் இணைந்த பிறகு அந்த மாதிரியான சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. ‘தர்மயுத்தம்’ ஆரம்பித்ததே டிடிவி தினகரன் குடும்பத்தினருக்கு எதிராகதான். ஆகவே அதில் ஒபிஎஸ் தெளிவாக இருக்கிறார். அதேபோல் முதல்வர் எடிப்பாடியும் கழகத்தை சிறப்பாக வழிநடத்துகிறார். அண்ணன் தம்பிகளாக இருந்து கழகத்தை இவர்கள் இருவரும் வழிநடத்துகிறார்கள்.
அம்மா இந்தக் கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படியே இவர்கள் இருவரும் நடந்து வருகிறார்கள். இதைபோல பேசி இவர்கள் இருவரையும் பிரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது” எனக் கூறினார்.