வெளியுறவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்சங்கர், மோடி தலைமையிலான அமைச்சரவைக்குப் புதியவர். ஆனாலும், இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி கண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பல புதுமுகங்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த எஸ். ஜெய்சங்கர் பற்றிதான் அனைத்துத் தரப்பிலும் பேச்சு அடிபடுகிறது.
டெல்லியில், 1955ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிறந்த இவர், பள்ளிப்படிப்பு முதல் முனைவர் படிப்பு வரை தலைநகரிலேயே கற்றார். 1977ல் ஐ.எஃப்.எஸ் (IFS) எனப்படும் இந்திய வெளியுறவுச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெய்சங்கர், 1979 முதல் 1981 வரை மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்தார். அப்போது அவர் ரஷ்ய மொழியை கற்றறிந்தார்.
பின்னர் இந்தியா திரும்பிய ஜெய்சங்கர், அப்போது வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜி.பார்த்தசாரதியுடன் இணைந்து பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தில் முதல் வெளியுறவுத்துறை செயலராக பணிபுரிந்தார். 1988 முதல் 1990 வரை இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளராகவும், அச்சமயம் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு அரசியல் ஆலோசராகவும் இருந்துள்ளார்.
இந்தியாவுக்கான வெளியுறவு விவகாரங்களைக் கையாள்வதில் திறம்பட செயல்பட்டு வந்திருக்கும் ஜெய்சங்கர், ஆங்கிலம், இந்தி, தமிழ், ரஷ்யன், ஜப்பானிஷ், ஹங்கேரியன் உள்ளிட்ட பல மொழிகளை கற்றறிந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக்காலத்தில், இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஜெய்சங்கர். 2005ல் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் 2007ல் முழுவடிவம் பெற்றதில் ஜெய்சங்கரின் பங்களிப்பு அளப்பரியது.
2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவை எல்லாவற்றையும்விட ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய காலம் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. சுமார் நான்கரை ஆண்டுகள் அப்பதவியில் இருந்த அவர், சீனாவுடன் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் மேம்பட கடுமையாக உழைத்தார். அச்சமயம் இந்தியா - சீன இடையிலான எல்லைப் பிரச்னையை சமாளிப்பதில் ஜெய்சங்கர் சீரிய முறையில் பணியாற்றியிருக்கிறார். அவர் சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்த காலகட்டடத்தில்தான் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.
2013ல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ரஞ்சன் மத்தாய் ஓய்வுபெற்றபோது, அந்தப் பதவிக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் முதல் தேர்வாக இருந்தவர் ஜெய்சங்கர்தான். ஆனால், பணி மூப்பு அடிப்படையில் அப்பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியதால், சுஜாதா சிங் வெளியுறவுத்துறை செயலாரானார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஜெய்சங்கரை இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமித்தார் பிரதமர் மோடி. பாரதிய ஜனதா அரசின் வெளியுறவுக் கொள்கைகளை நிர்மானித்ததில் ஜெய்சங்கருக்கு பெரும் பங்கு உண்டு. அவரது திறமை மீது பிரதமர் மோடி நம்பிக்கை கொண்டிருந்தார். கடந்த நாற்பது ஆண்டுகால இந்திய வரலாற்றில், மிக நீண்ட காலம் வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றியவர் என்ற பெருமை ஜெய்சங்கருக்கு உண்டு.
கடந்த ஆண்டு வெளியுறவுத்துறைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஜெய்சங்கர், அதன்பிறகு டாடா நிறுவனத்தின் குளோபல் கார்பரேட் அஃபையர்ஸ் (GLOBAL CORPORATE AFFAIRS) பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். தற்போதைய நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஜெய்சங்கருக்கு, வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.