ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் போல, பிரணாப் முகர்ஜியும் சல்யூட் அடிக்கும் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதற்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி பிரணாப், இதில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பிரணாப் முகர்ஜியிடன் கூறினர். அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியும் வேண்டாம் என்று கூறியிருந்தார்.
‘பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பாஜக பொய்யான செய்திகளை பரப்பும், நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும் தகவல்களையும் பாஜக பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் போல, பிரணாப் முகர்ஜியும் சல்யூட் அடிக்கும் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மார்பிங் செய்யப்பட்ட படத்தை பதிவிட்டு, ‘நான் பயந்தது நடந்துவிட்டது. அதனால்தான் எச்சரித்தேன். நான் சொல்லி சில மணி நேரங்கள் கடந்த நிலையில், பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் தங்களது மோசமான தந்திரத்தை ஆரம்பித்துவிட்டன’ என்று பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜி படம் மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பிரிவினை சக்திகள் இதுபோன்ற படங்களை வெளியிட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பிரிவினை சக்திகள் முதலில் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தடுக்க முயற்சித்தன, தற்போது ஆர்.எஸ்.எஸ்-ஐ அவமதிக்கும் வகையில் மோசமான தந்திரங்களை செய்கிறார்கள்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.