டிரெண்டிங்

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

rajakannan

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை ராணுவத்தினருடன் ஒப்பிட்டு அதன் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முஸ்பர்பூர் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுப்பினர்கள் மத்தியில் மோகன் பகவத் பேசினார். அப்போது, “நம்முடையது ஒரு ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தைப் போன்ற கட்டுப்பாடு நம்மிடையே உள்ளது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எப்போதும் நாட்டிற்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சொந்த வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயல்படுகின்றனர்” என்றார் மோகன் பகவத். 

மேலும் அவர் பேசுகையில், “இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களை தயார்படுத்த ராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், நம்மை கேட்டுக் கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை ராணுவமாகத் தயார் படுத்திவிடுவோம். அதுதான் நம்முடைய திறமை ” என்றார்.

இந்திய ராணுவத்தையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளனர். தனது பேச்சுக்காக மோகன் பகவத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன