மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் 3 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்கப் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 10-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 702 பறக்கும் படைகள் மற்றும் 702 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் கடந்த 11 மற்றும் 12-ஆம் தேதிகளில், பல்வேறு பகுதியில் ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 11-ஆம் தேதி பறக்கும் படையினர் மூலம், 19 லட்சத்து 64 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கமும், கண்காணிப்பு நிலைக்குழு மூலம் 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் அதற்கு அடுத்த நாள் அதாவது 12-ஆம் தேதி பறக்கும் படையினர் மூலம் ஒரு கோடியே 10 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கமும், கண்காணிப்பு நிலைக்குழு மூலம் 92 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி இரண்டு நாட்களிலும் மொத்தம் 3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ஆம் தேதியன்று மட்டும் 9 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.