ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு, எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி குழப்பம், தினகரன் போட்டி, தோழமை கட்சியான காங்கிரஸ் தவிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவு போன்றவற்றால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்திருந்தனர். இதனால் உற்சாகமாக இருந்த தி.மு.க.வுக்கு இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. தி.மு.க.வின் வாக்குகளை பணம் தின்றுவிட்டதாக அக்கட்சியினர் கூறினாலும், இந்த படுதோல்வி இனிவரும் தேர்தல்களில் தி.மு.க. மீதும், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் மீதும் மக்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
டெபாசிட் பெற முடியாத அளவிற்கு தோல்வியை சந்தித்திருக்கும் திமுகவின் இந்த பரிதாப நிலையை பார்க்கும்போது, அக்கட்சியின் செல்வாக்கு இந்த அளவுக்குதான் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் தி.மு.க.வால் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகத்தையும் கூடவே எழுப்பியிருப்பதாகவும் அவர்கள் பார்க்கின்றனர். அ.தி.மு.க.வில் குழப்பங்கள் தொடரும் போதிலும், தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும் இந்த நிலையை தொண்டர்களால் ஜீரணிக்க முடியுமா என்று கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தி.மு.க. மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் மீதுள்ள தொண்டர்களின் மனநிலையையும், மக்களின் மனநிலையையும் இத்தேர்தல் முடிவு உலுக்கியிருக்கிறது.
அதிமுகவுக்கு மாற்று என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான வெற்றிடத்தை நம்மால் மட்டும்தான் நிரப்ப முடியும் என்றும் நினைத்திருந்த திமுகவுக்கு, இத்தேர்தல் முடிவு, அரசியலில் இனி வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கருதலாம். ஆர்.கே.நகரின் தேர்தல் முடிவு, ஒரு கட்சியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றாலும், ஸ்டாலின் அரசியல் கனவுகளை இம்முடிவு கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் என்றே அரசியல் பார்வையாளர்களாலும், நடுநிலையாளர்களாலும் பார்க்கப்படுகிறது.