ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் உள்ளிட்ட 54 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்து இருந்தார். விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட விஷால், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். இதனையடுத்து, மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். அந்த ஆதாரத்தை தேர்தல் அதிகாரியிடமும் சமர்பித்தார்.
இதனையடுத்து, நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “நேர்மை, நீதி, நியாயம் ஜெயித்தது. எனது மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. காலையில் இருந்து இதற்காக தான் காத்திருந்தோம். நியாயமாக என்ன நடைபெற வேண்டுமோ அதனை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. புகாரில் உண்மை இல்லை என்ற அடிப்படையில் மனு ஏற்கப்பட்டுள்ளது.
சக சுயேட்சை வேட்பாளர்கள் எனக்காக உதவியாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. மனு தாக்கல் செய்வதில் இருந்து ஏற்கப்படும் வரை அனைத்துமே போராட்டம் தான். நாளை முதல் மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்க உள்ளேன். நல்லது நடக்க வேண்டும் என்றால் தடைகள் இருக்கவே செய்யும். தேர்தலை நேர்மையாக சந்திக்க உள்ளேன்” என்று கூறினார்.